மீண்டும் பொதுப் ரெயில் போக்குவரத்து தொடக்கம்? - தயார் நிலையில் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள்.


ஊரடங்குக்குப் பிறகு ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் முதலில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மேலும் 19 நாட்களுக்கு அதாவது மே மாதம் 3-ந்தேதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனால் பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

மே 3-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.




ஊரடங்குக்கு பிறகு ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.



இந்த நிலையில் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தெற்கு ரெயில்வேயில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியுடன் இடத்தை ஒதுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் காந்தி இர்வின் சாலை, பூந்தமல்லி சாலை ஆகிய இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இந்த 2 நுழைவு வாயிலில் இருந்து நடைமேடை வரை 3 அடி தூரத்தில் குறிக்கப்பட்ட கோடுகள் இருக்கும்.


நிலையத்தில் நடத்தல் மற்றும் நிற்கும்போது பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க உதவும் விதமாக தரையில் மஞ்சள் நிறத்தில் கோடு வரையப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழிகாட்ட இன்னும் கூடுதலான அடையாளங்கள் விரைவில் வைக்கப்பட உள்ளன.


மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் நடை மேம்பாலங்கள், படிக்கட்டுகள், நடைமேடைகள், டிக்கெட் பதிவு மையங்கள் ஆகியவற்றிலும் சமூக இடைவெளி கோடு வரையப்பட்டுள்ளது.


சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 1 மற்றும் 2 நடைமேடைகள் தவிர எல்லா நடைமேடைகளிலும் சமூக இடைவெளி கோடு வரையப்பட்டுள்ளது.

இது தவிர ரெயில் நிலையத்தின் முக்கிய பகுதிகளில் 600 பேர் சமூக இடைவெளியுடன் நிற்கவும், அமரவும் கோடுகள் வரையப்பட்டுள்ளன. முக்கிய நுழைவு வாயில் (அடையாறு ஆனந்த பவன்) வழியாக பயணிகள் உள்ளே செல்லவும், மூர் மார்க்கெட் வளாகப் பகுதி வழியாக வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


பயணிகளின் உடல் வெப்ப நிலையை தெர்மல் கருவி மூலம் சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


எழும்பூர் ரெயில் நிலயத்தில் இருந்து நாள்தோறும் 53 ரெயில்கள் செல்கின்றன. 2 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 71 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 3 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.


இதேபோன்று சமூக இடைவெளியை குறிக்கும் அடையாளங்கள் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சில முக்கிய ரெயில் நிலையங்களில் இடம்பெற உள்ளன.




No comments